“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்”
“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்”
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையிலுள்ள தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கல்கள், திட்டமிட்ட ஒடுக்குமுறை மற்றும் அரசால் ஆதரிக்கப்படும் வன்முறைகள் ஆகியலற்றிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசின் உருவாக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே, பாகுபாடான சட்டங்கள், அரசியல் விலக்கம், இராணுவமயமாக்கல் மற்றும் வன்முறை ஆகியவற்றின் மூலம் தமிழர்கள் மெதுவாகவும் திட்டமிட்டும் புறக்கணிக்கப்பட்டனர். பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்தக் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள், பல கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுவது போல, ஒரு கட்டமைப்பு அடிப்படையிலான இனப்படுகொலை (Structural Genocide) செயல்முறையாக மாறியுள்ளது.
இந்தப் பாதையை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. 1950களில் நடைமுறைப்படுத்தப் பட்ட கல்ஓயா குடியேற்றத் திட்டம், அரசால் ஆதரிக்கப்பட்ட நில அபகரிப்பின் ஆரம்ப எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். அதில், தமிழர்களின் நிலங்கள் கைப்பற்றப்பட்டு, இராணுவ ஆதரவுடன் சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டன. இதன் மூலம் மக்கள் தொகைச் சமநிலை நிரந்தரமாக மாற்றப்பட்டது. இந்த நில அபகரிப்பு முறை இன்று வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்கிறது.
தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புக் கலவரங்கள் இந்த வன்முறையை மேலும் ஆழப்படுத்தின. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடந்த இனவெறித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு நடந்த “கருப்பு ஜூலை” என அறியப்படும் இனவழிப்புக் கலவரத்தில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; தமிழர்களின் வீடுகள், வணிகங்கள் அழிக்கப்பட்டன; அரசின் நேரடி பங்கேற்போ அல்லது உடந்தையோடு முழு சமூகங்களும் அச்சுறுத்தப்பட்டன. இந்த நிகழ்வுகள் ஆயுத மோதலை வேகப்படுத்தி, இன அடிப்படையிலான ஒடுக்குமுறையை உறுதிப்படுத்தின.
2009 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த ஆயுத மோதல் காலப்பகுதியில், தமிழர்கள் தொடர்ச்சியான படுகொலைகள், கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள், பாலியல் வன்முறைகள் மற்றும் பெருமளவிலான இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். செம்மணி உள்ளிட்ட பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டுக் கல்லறைகள், பெரிய அளவிலான நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான உறுதியான சாட்சிகளாக உள்ளன. இந்தப் போர் ஒரு இராணுவ மோதல் மட்டுமல்ல; அது தமிழர்களின் அரசியல், பண்பாட்டு மற்றும் நில உரிமை இருப்பை அடக்கி அழிக்கும் நீண்டகால அரசுக் கொள்கைகளின் தொடர்ச்சியாகும்.
இந்த வன்முறையின் மிகக் கொடூரமான வெளிப்பாடுகளில் ஒன்று 2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தது. பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டதாகவும், சர்வதேச சமூகத்திற்கு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டதாகவும் அரசால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் முழுக் குடும்பங்கள் உட்பட பலர், தங்கள் குடும்பங்களால் ஒப்படைக்கப்பட்டோ அல்லது நம்பிக்கையுடன் தாமாகவே சரணடைந்தோ இருந்தனர். ஆனால் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர். பொய்யான வாக்குறுதிகளால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட இந்த மக்கள், தடயமின்றி மறைந்தனர்.
பல ஆண்டுகளாக குடும்பத்தினரின் இடையறாத தேடல்கள், போராட்டங்கள் மற்றும் சட்ட முயற்சிகளுக்குப் பிறகும், தொடர்ச்சியான இலங்கை அரசுகள் உண்மையையோ நீதியையோ வழங்கத் தவறிவிட்டன. பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவை எதுவும் நம்பகமான வழக்குத் தொடர்வுகளையோ அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலையோ ஏற்படுத்தவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் (OMP) போன்ற அமைப்புகள், சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் கருவிகளாகவும், வழக்குகளை நிர்வாக ரீதியாக மூடவும், முன்னேற்றம் என்ற மாயையை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன; உண்மையை வெளிக்கொணருவதற்கல்ல.
இந்தக் கடுமையான உண்மையை உணர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் 2017 பிப்ரவரி 20 முதல் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றைய தேதிவரை, இந்தப் போராட்டம் 3,250 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தக் காலப்பகுதியில், 450 க்கும் மேற்பட்ட முதிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமலேயே உயிரிழந்துள்ளனர். இந்தப் போராட்டத்தைத் தொடரும் எங்களில் பலர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அணுகி வருகிறோம்; தாங்க முடியாத துயரும் நிச்சயமற்ற நிலையும் எங்களுடன் உள்ளது.
ஒவ்வொரு புதிய அரசும் தங்களை சீர்திருத்தவாதிகளாகவோ அல்லது மீட்பவர்களாகவோ சர்வதேச சமூகத்தின் முன் காட்டிக்கொண்டு, உள்நாட்டு செயல்முறைகள் மூலம் நீதியை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறது. ஆனால் ஒவ்வொரு அரசும் ஒரே மாதிரியான நடைமுறையையே பின்பற்றியுள்ளது: தாமதம், மறுப்பு மற்றும் ஏமாற்றம். சர்வதேச ஆதரவுடன், இந்தத் தோல்வியடைந்த செயல்முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தண்டனையின்மையின் வட்டம் இடையறாது தொடர்கிறது.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னணியில், இந்த நிர்வாகம் பதவியேற்று ஒரு வருடம் கடந்துவிட்டதை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்; ஆனால் உண்மையான பொறுப்புக்கூறலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் டிட்வா புயல் போன்ற பேரழிவுகளால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடி கூட கடந்த கால அத்துமீறல்களை எதிர்கொள்ள அரசியல் மனப்பாங்காக மாறவில்லை.
அதிலும் முக்கியமாக, இனத்தைவேசத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தைப் பெறவும் தக்கவைக்கவும் முயலும் சிங்கள தேசியவாத அரசியல் கட்சிகள் இலங்கையின் அரசியல் மேடையை ஆட்சி செய்யும் வரையில், எந்த ஜனாதிபதியும்—எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்—நீதியை வழங்க விரும்பவோ முடிவெடுக்கவோ இயலாது. தொடர்ச்சியான சிங்கள ஆதிக்க அரசுகளுடன் எங்களுக்குள்ள அனுபவம், உள்நாட்டு தீர்வுகளின் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாத நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அரிதாக ஒரு ஜனாதிபதி பொறுப்புக்கூறலை முயன்றால்கூட, “யுத்தக் கதாநாயகர்களைக் காட்டிக். கொடுத்ததாகக்” குற்றம் சாட்டி இனவெறி அரசியல் சக்திகள் மக்கள் கோபத்தைத் தூண்டும்; இதன் மூலம் அரசியல் நிலைத்தன்மையை அச்சுறுத்தி, நீதியிலிருந்து பின்னடையச் செய்வர். இந்த யதார்த்தம், இலங்கையில் உள்நாட்டு பொறுப்புக்கூறல் கட்டமைப்பு ரீதியாகவே சாத்தியமற்றது என்பதை வெளிப்படுத்துகிறது.
எனவே, சர்வதேச நீதி மட்டுமே ,உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தீர்வு நோக்கி எங்களுக்கான ஒரே நடைமுறையான பாதையாக உள்ளது. தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப் பட்ட பாரிய கொடூரங்கள்,சர்வதேச குற்றங்கள் ,மற்றும் தமிழர்களைக்கு எதிராகப் புரியப்பட்ட இனப்படுகொலைச் செயல்களுக்கு பொறுப்புக்கூறல், என்பன ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை மூலம் மட்டுமே, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவும் அவசரமாக, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எங்களின் நீண்டகாலக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்: இலங்கை, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக , இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த இன முரண்பாட்டிற்கு நிரந்தரமும் நீதியுமான அரசியல் தீர்வை அடைய, தமிழ் மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை சுதந்திரமாகத் தீர்மானிக்கக் கூடிய வகையில், சர்வதேச மேற்பார்வையுடன் நடத்தப்படும் ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகிறோம்.
நன்றி.
அ. லீலாதேவி
பொதுச் செயலாளர்




