உள்ளூர்

நேர்காணல்
பொ. ஐங்கரநேசன்
தலைவர் – தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ள பிரஜாசக்தி பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?
கிராமமட்டங்களில் அபிவிருத்தித்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கே ‘பிரஜாசக்தி’ என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சொல்லிக் கொண்டாலும் உண்மையான, உள்ளார்ந்த நோக்கம் அதுவல்ல. ‘பிரஜா’ என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் மக்கள் என்பதுதான். இந்த மக்கள் சக்தி அமைப்பு தேசிய மக்கள் சக்தியின் கிராம மட்டக்கிளைகள் என்பதுதான் உண்மை.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்தான் பிரஜாசக்திக் குழுவின் தலைவரை நியமனம் செய்கிறார். மாவட்டச் செயலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோதானே இருக்கிறார். அவரால் நியமிக்கப்படுகின்ற பிரஜாசக்திக் குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சார்ந்தவராகத்தானே இருப்பார். இதில் உறுப்பினர்களைச் சேர்க்கும் அல்லது நீக்கும் முழு உரிமையையும் இந்த நியமனத் தலைவரே கொண்டிருக்கின்றார். மொத்தத்தில் பிரஜாசக்தி என்பது தேசிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.பியின் கிராமமட்டக் கிளைகளாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அவர்களைப் புறம்தள்ளி பிரஜாசக்தி உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, உள்ளூராட்சித் தேர்தலில் தோற்ற ஜே.வி.பியினர்கூட பிரஜாசக்தி குழுவில் உறுப்பினராக இருக்கிறார்கள். அந்த வகையில் பிரஜாசக்தி ஒரு ஜனநாயக விரோத அமைப்பாகவும் உள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன? தேர்தல் வந்தால் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் போட்டியிடுமா?
வடக்கு மாகாணசபையில் அமைச்சராகப் பணியாற்றியவன் நான். மக்கள் நலப் பணிகள் பலவற்றை முன்னெடுத்தபோது அதிகாரத்தைமீறிச் செயற்படுகின்றேன் என்று குற்றம் சாட்டப்பட்டவன் நான். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை அரசால் அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தச்சட்டத்தின்கீழ் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. ஒற்றையாட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் எதுவும் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபைக்கு பகிரப்படவில்லை. மத்திய அரசினால்இ அதனால் நியமிக்கப்படும் ஆளுநரிடமேயே கையளிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பல இதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றன. இதனாலேயே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் அது சார்ந்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையும் ஏக்கிய ராஜ்ய என்ற ஒற்றையாட்சியின் கீழ் அரசு கொண்டுவரவிருக்கின்ற புதிய அரசியல் அமைப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றது. ஒற்றையாட்சியின் கீழ் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடவே முடியாது என்பதை மக்கள் மத்தியில் விளக்கி வருகின்றோம்.
இதன் பொருள் நாங்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்பதல்ல. பிழையானவர்களின் கைகளில் மாகாணசபை சென்றுவிட்டால் அது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். இதனாலேயே எவ்வித அதிகாரங்களையும் கொண்டிராதபோதும், தமிழர்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வின் அடிப்படையாக இல்லாதபோதும் மாகாணசபைத் தேர்தலில் நாம் போட்டியிடுவது தவிர்க்கமுடியாததாகிறது.

பிரஜாசக்தி தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லையே?
பிரஜாசக்தி பற்றி மட்டுமல்ல, பொதுவாகவே அரசியல் ரீதியான சரியான தெளிவு அல்லது விழிப்புணர்வு அற்ற சமூகமாகவே ஈழத்தமிழ்ச் சமூகம் மாறிக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு விழிப்புணர்வு இருந்திருந்தால், முற்றுமுழுதாக தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுத்துவந்த ஜே.வி.பியினைத் தமிழ் மக்கள் ஆதரித்திருக்க மாட்டார்கள் அல்லவா? இந்திய – இலங்கை ஒப்பந்தம் உருவாகியபோது தென் இலங்கையில் இந்திய எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்களைத் தனது பிக்குகள் அணி மூலம் நடாத்தியது ஜே.வி.பிதானே. விடுதலைப் புலிகளையும் இணைத்து சுனாமி நிவாரணப் பணிகளுக்கென உருவாக்கப்பட்ட கட்டமைப்பை இல்லாமல் செய்ததும் இவர்கள்தானே. வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றப் படியேறி நீக்கியதும் இவர்கள்தானே. இப்படியிருந்தும் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து, பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவுசெய்திருக்கிறார்கள் என்றால் அரசியல் விழிப்புணர்வு அற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதுதானே அர்த்தம்.
தென்னிலங்கையில் நடைபெற்ற ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான அரகலயப் போராட்டமே ஜே.வி.பியை ஆட்சிப்பீடம் ஏற்றியது. முற்றுமுழுதாக தென்னிலங்கை மக்களிடம் இருந்து வேறுபட்ட அரசியலை, விடுதலை அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்த எமது மக்களிலும் அந்த அரகலய செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
அறியாமைகளில் மிகவும் மோசமான அறியாமை அரசியல் அறியாமைதான் என்பது ஜேர்மனிய இடதுசாரிச் சிந்தனையாளர் பெர்டோல்ட் பிரெக்ட் என்பவரின் கூற்று.

மக்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ஊட்டவேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உரியது, அதை எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் செய்வதற்கு தவறியுள்ளதாக நீங்கள் கருதவில்லையா?
மக்களுக்கு அரசியல் அறிவு ஊட்டி, அவர்களை அரசியல் விழிப்புணர்வு பெறவைத்து, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் பங்குபற்றுநர்களாக்கும் பொறுப்பு எமது கட்சிகளுக்குரியது என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர் அது நடைபெறவில்லை. எமது அரசியல்வாதிகள் தேர்தல்கள் வரும்போது மாத்திரமே மக்களிடம் செல்கிறார்கள். தமிழ்த் தேசியம் என்ற மந்திரச் சொல் தங்களுக்கு எப்படியாவது வாக்குகளைப் பெற்றுதந்து விடும் என்று நம்புகிறார்கள். ஆனால், களநிலை வெகுவேகமாக மாறிவருகிறது என்பதைக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் எங்களுக்குத் தெளிவாகவே எடுத்துக்காட்டியிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் யுத்தகாலத்தில் பிறந்த குழந்தைகளே இன்றைய வாக்காளர்கள். அவர்கள் தான் தங்கள் பெற்றோர்களின் வாக்குகளையும்கூட யாருக்கு எனத் தீர்மானிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஏன் தோற்றம் பெற்றது என்பதில் தெளிவில்லை. அல்லது இவர்களுக்கு நாம் தெளிவூட்டவில்லை. எந்நேரமும் கைத்தொலைபேசிகளின் ஊடாக சமூக ஊடகங்களில் உலாவித்திரியும் இவர்கள் இலகுவில் தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதே உண்மை. இந்த நிலையை வளரவிடுவது இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்புக்கே ஆபத்தானதாக அமையும்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஊடாக சமகால அரசியல் அரங்கை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடாத்தி வருகிறீர்கள். மக்களிடம் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
சமகாலத்தில் இடம்பெறும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிலவரங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே பல வருடங்களாக இந்நிகழ்ச்சியை நடாத்திவருகிறோம். ஒரு நல்ல விடயத்துக்காக எவ்வளவு தூரத்துக்குக் கீழ் இறங்குவதற்கும் நாம் தயார் என்ற அடிப்படையில் அவர்களை வலிந்து, வருந்தி அழைப்புவிடுக்கிறோம். கணிசமானோர் பங்கேற்றும் வருகிறார்கள். ஆனால் எமக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியால் எம்மால் எல்லா இடங்களுக்கும் சென்று இதனை நடாத்துவதற்கு இயலவில்லை. எங்களைப் போன்று தமிழ்த் தேசியம் பேசும் எல்லாக் கட்சிகளும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஊட்டவேண்டும். அப்போதுதான் மக்களையும் நியாயமான எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டவும் முடியும்.
எப்போதாவது அரிதாக கூட்டங்களை நடாத்துகின்ற சில கட்சிகள்கூட, துரதிர்ஸ்ட வசமாக புதிய அரசியல் அமைப்பு குறித்து அரசாங்கம் அக்கறை காட்டிவரும் நிலையில் அது குறித்து எதுவும் பேசாமல் மாகாணசபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் மக்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுதான் பேசிவருகின்றார்கள். தமிழ்த் தேசியப் பேரவையாக அண்மையில் நீங்கள் தமிழகம் சென்று முதலமைச்சர் உட்ப்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறீர்கள். இந்த சந்திப்புகளின் பிரதான நோக்கம் என்ன?
ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக புதிய அரசியல் அமைப்பை விரைவில் கொண்டுவர இருக்கிறது. இதனை ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். மைத்திரி – ரணில் நல்லாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ய அரசியல் அமைப்புத் திருத்த வரைபை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியல் அமைப்பு உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை காரணமாக அவர்களால் இதனை இலகுவில் கொண்டுவரவும் முடியும். இதைக் கருத்தில் எடுத்தே, தமிழகம் சென்று அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஒற்றையாட்சியின் ஆபத்து பற்றி எடுத்துச் சொன்னோம். ஸ்ரீலங்கா அரசு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டுவருவதை இந்திய மத்திய அரசு தடுக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்.
ஏக்கிய ராஜ்ய அரசியல் அமைப்புக்கு மாற்றாக, புதிய அரசியல் அமைப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமையை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

உங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசியல் தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்களா?
ஏற்றுக்கொண்டபடியால்தானே தமிழக முதலமைச்சர் மு.க.ஸடாலின் எங்களின் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டு, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈழத்தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் அமைப்பில் சுயாட்சியை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என வற்புறுத்தி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். நாங்கள் தமிழகத்தில் இருந்தபோதே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு, அவர் மகன் மருத்துவர் அன்புமணி ஆகியோர் எங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஊடகஅறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எங்களது கோரிக்கைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கேட்டிருக்கிறோம். நாம் சந்தித்த தலைவர்கள் அனைவரும் சாதகமாகவே நடந்துகொண்டார்கள்.

தமிழக தலைவர்கள் சிலரை நீங்கள் சந்தித்தமை தொடர்பாக சமூகஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இவ்வகையான விமர்சனங்கள் எழும் என்பதைத் தெரிந்திருந்தும்தான் நாங்கள் இந்த சந்திப்புகளைத் திட்டமிட்டோம். தமிழகத்தின் திரைப்பட நடிகர்களுக்கு இங்கே ரசிகர்கள் இருப்பதைப் போன்று, இப்போது தமிழக அரசியல் தலைவர்களுக்கும் இங்கு ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களும் சினிமா ரசிகர்களைப் போன்றே தங்களுக்குப் பிடிக்காத தமிழகத் தலைவர்கள் மீது சமூகஊடகங்களில் வெறுப்பைக் கக்கிவருகிறார்கள். இந்த விமர்சனங்கள் மூலம் ஒவ்வொரு தலைவர்களின் பின்னாலும் உள்ள அவர்களது கோடானுகோடித் தொண்டர்களை எங்களிடம் இருந்தும், ஈழப்பிரச்சினையில் இருந்தும் நாமே அந்நியப்படுத்துகிறோம்.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழின அழிப்பை அப்போது தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கம் ஈழத்தமிழ் மக்களிடையே உண்டு. உணர்வுமயப்பட்ட இந்த அபிப்பிராயத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அரசியல் அறிவார்ந்த ரீதியாக இதே அபிப்பிராயத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் நாம் தமிழ் நாட்டுடனான உறவைப்பேண முடியாது.
எமது விடுதலைப் போராட்டத்தில், பின்தளமாகத் தமிழக மக்களே இருந்து வந்துள்ளார்கள். ஆயுதப் போராட்டத்தில் பின்களப் பணியாளர்கள் அவர்கள்தாம். இந்தத் தொப்பிள்கொடி உறவை நாமாகவே அறுத்துவிடக்கூடாது. அந்த ஏழுகோடித் மக்களின் ஆதரவுப் பலம் எங்களுக்கு எப்போதும் வேண்டும். இதைப் புரிந்துகொண்டு தமிழகத்தின் கட்சி அரசியலுக்குள் நுழைந்து நாம் அரைவேக்காட்டுத்தனமாகக் கருத்துச் சொல்வதை முதலில் தவிர்க்க வேண்டும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவான மாகாணசபைகளுக்கான தேர்தலையே உரியகாலத்தில் இலங்கை அரசைக் கொண்டு நடாத்தி வைக்க முடியாத இந்திய அரசு தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் சார்பாக இலங்கை அரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?
பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இந்தியா தனது நலன்களை முன்னிறுத்தியே அயலக உறவுகளைத் தீர்மானிக்கும். இந்தியா மாத்திரம் அல்ல; உலகநாடுகள் யாவுமே தமது நலனை முன்னிறுத்தியே தமது வெளிவிவகாரக் கொள்கையை வடிவமைக்கும். இதுவே உலக நியதி. இலங்கை அரசு அதிதீவிரமாக அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தபோதே இலங்கையை தனது வழிக்குக் கொண்டுவரும் பொருட்டு இந்தியா இலங்கையில் அத்துமீறித் தலையிட்டது. இதில் ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியா ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழக மக்களின் பேரெழுச்சியை உள்நாட்டில் தனக்கெழுந்துள்ள பெரும் நெருக்கடியாக வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டது.
இதே போன்றுதான் இனிவரும காலங்களிலும். ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பணியவைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்திய அரசுக்கு எழுந்தால் மாத்திரமே இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையில் எடுக்கும். அப்போதும் வெளியுலகுக்குக் காட்டிக்கொள்வதற்கு தமிழகத்தில் இருந்து எழும் அழுத்தம் அதற்குத் தேவைப்படும். இந்தப் புரிதல்களோடுதான் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

    Jestin George

    About Author

    Leave a comment

    You may also like

    உள்ளூர்

    கரவெட்டி இளைஞனை காணவில்லையெனகுடும்பத்தினர் முறைப்பாடு

    செல்வாபுரம் கரணவாய் தெற்கு கரவெட்டி எனும் முகவரியில் வசிக்கும் சந்திரசேகரம் (சந்திரமோகன்) (NIC-871273766) என்பவரை 09/02/2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர்
    உள்ளூர்

    மாவீரர் தினம்

    • November 27, 2025
    இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர்